போர்ச்சுக்கல் தொழில் அதிபருடனான காதலை முறித்துக்கொண்ட ரம்யா

  • 6 months ago
  • 0 0

போர்ச்சுக்கல் நாட்டு தொழில் அதிபருடன் நடிகை ரம்யாவுக்கு திருமணம் குறித்து, ரம்யாவின் தாய் ரஞ்சிதா பதில் அளித்துள்ளார்.

தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்பட பல்வேறு படங்களில் நடித்தவர் ரம்யா. கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்த ரம்யா தெலுங்கு, கன்னட மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2013-ம் ஆண்டு மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரம்யா, கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மண்டியா நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார்.

அதன்பிறகு அகில இந்திய காங்கிரஸ் சமூக வலைத்தள பிரிவு தலைவியாக செயல்பட்டார். இதையடுத்து அவர் சமூக வலைத்தளங்கள் மூலம் பா.ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்தார். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து ரம்யா எங்கு இருக்கிறார்? என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

இந்த நிலையில் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த தொழில்அதிபர் ரபேலுடன் நடிகை ரம்யாவுக்கு துபாயில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் பரவின. இதற்கு ரம்யாவின் தாய் ரஞ்சிதா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:- தற்போது ரம்யா திருமணம் செய்யும் எண்ணத்தில் இல்லை. திருமணம் குறித்து ரம்யா முடிவு செய்தால் அதுபற்றி வெளிப்படையாக கூறுவோம். அவருடைய திருமணத்தை மூடிமறைத்து ரகசியமாக நடத்த வேண்டிய அவசியம் இல்லை. 

ரம்யா திருமணம் குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். ரம்யா அரசியலில் கவனம் செலுத்தியபோது, ரபேல் தனது தொழிலில் கவனம் செலுத்தினார். இதனால் அவர்கள் அதிகமாக சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. மேலும் ரம்யாவுக்கு இந்தியாவை விட்டு செல்ல விருப்பம் இல்லை. ரபேலுக்கு போர்ச்சுக்கல் நாட்டை விட்டு வரவும் மனமில்லை. இதுபோன்ற காரணங்களினால் 2 பேரும் பரஸ்பரம் பேசி பிரிந்தனர். இருப்பினும் அவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். அவருடைய குடும்பத்தினரும், நாங்களும் தொடர்பில் தான் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *